'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்டதே இல்லை; என் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? - மஹுவா மொய்த்ரா எம்.பி. கேள்வி
|மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை ஒருமுறை கூட கேட்டதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையத்தில், கடந்த 30-ந்தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும் 36 மாணவிகள், அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகள், 8 பேர் முதலாம் ஆண்டு மாணவிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த மாணவிகள் ஒரு வாரத்திற்கு விடுதியைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மனதின் குரல்(மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சியை நான் இதுவரை கேட்டதே இல்லை. ஒரு முறை கூட கேட்கவில்லை. இனி கேட்கப் போவதுமில்லை. எனக்கும் தண்டனை வழங்கப்படுமா? என் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்படுமா? இப்போது கவலையாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் மாணவிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வெளியான செய்தியினையும் பகிர்ந்துள்ளார்.